tamil-new-year

நமது பாரத தேசம் பல்வேறு பாரம்பரியங்களை பல்லாண்டு காலமாக அதன் மரபு மாறாமல் இன்னும் பின்பற்றும் தார்மிக பூமியாகும். அதிலும்  நம் தென்னிந்திய  பாரம்பரியம் மிகவும் தொன்மைவாய்ந்த பண்பாடாகும். இன்றும் நமது தேசத்தில் பல வகையான பண்டிகைகள் பலக் கோடி மக்களால் பலதரப்பு சமுதாயங்களில் கொண்டாடப்படுகின்றது. நமது தமிழ்  புத்தாண்டு நம் தமிழர்களின் வருடத்தின் துவக்கம் மட்டுமல்லாமல் பல சிறப்புகளை உள்ளடக்கியதாகும்.

தமிழ் மாதங்கள் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகின்றன. இந்த நடைமுறை முதன்முதலில் விவசாயம் துல்லியமாகச் செய்ய வானிலை ஆய்வுகளைச் செய்ததிலிருந்து உருவானதாகும். இது புத்தாண்டு மட்டுமல்லாது நமது வேளாண்மையின் சுழற்சி துவங்கும் காலமாகும்.

தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும்

இந்தச் சிறப்புகளுடைய   சித்திரை மாதத்தில் நம் தமிழ் நாட்டிலும், கேரள மாநிலத்திலும் புத்தாண்டை வரவேற்கின்றோம். பிறக்கப்போகும் இந்த புத்தாண்டின்ப்  பெயர் ‘சார்வரி’ ஆகும். வசந்த காலத்தில் செடி கொடிகள் எல்லாம் புத்துணர்ச்சிப் பெற்று புது இலைகள், மலர்கள், கனி, காய்கள் காய்க்கும் வேலையில், நம் மக்களும் புத்தாண்டை விசேஷமாக வரவேற்று மங்களகரமான வாழ்வினை நம்மை காக்கும் இஷ்ட தெய்வங்களை வேண்டி துவங்க வேண்டும்.

ganesha-tamil-new-year

புத்தாண்டின் துவக்கத்தில் நமது குல தெய்வங்களை வேண்டிக்கொண்டு, வீட்டில் உள்ள பெரியவர்களை நமஸ்கரித்து துவங்குவது அந்த ஆண்டு முழுவதிலும் நன்மையை அளிக்கும். நமது சனாதன தர்மத்தின் தத்துவம் இயற்கையுடன் ஒன்றியுள்ளதை இதைப்போல் பல பண்டிகைகளை வைத்து அறிந்துகொள்ளலாம்.

தமிழ் புத்தாண்டு எப்படி கொண்டாடுவது

இந்த வருடத்தின் முதல் நாளில், வீட்டை சுத்தம் செய்து, வாசலில் அழகு கோலமிட்டு, வாயிற்படியில் மஞ்சள் குங்குமமிட்டு, மாயிலை தோரணம் கட்டி, காலையில் விளக்கேற்றி நமது யாகத்திற்கு மெருகேற்ற ,மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும். அதுவும், நமது வீட்டில் மஞ்சள் குங்குமமிட நம்மை நோய்க்கிருமிகள் மற்றும் துஷ்ட தேவதைகளிடமிருந்து காப்பாற்றும் ஆற்றல் பெற்றது.

  • வருடம் பிறக்கும் இந்த முதல் நன்னாளில் நமது உணவில் அறுசுவைகளையும் இடம்பெறச் செய்வது முக்கியம். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய அறுசுவைகளும் மனிதனின் வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலிப்பாகவும் உள்ளது. அந்த வெவ்வேறு குணங்களும் கலந்து சமநிலையில் இந்த புத்தாண்டு அமையவேண்டும் என்பது இதன் தத்துவமாகும்.
  • சித்திரையில் சூரியன் உச்சத்தில் இருப்பதால் நீர் மோர், பானகம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து உணவுடன் அருந்துவது நமது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும். அதிலும் நிம்பகுஸும பக்ஷணம், அதாவது வேப்பம்பூவை நமது உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பு. வேப்பம்பூவிற்கு நமது தூய்மை செய்யக்கூடிய ஆற்றல் வேறெந்த மூலிகைக்கும் இல்லை.

நமது புத்தாண்டு, பாரம்பரியம் மட்டுமல்லாது விஞ்ஞானப்பூர்வமாக நமது ஆரோக்யத்தை மையமாக வைத்து வரும் பருவங்களுக்கேற்ப உணவு முறைகளை வகுத்தளிக்கும் ஒரு நினைவூட்டலாகும்.

புத்தாண்டு தினத்தில் கோவில்களுக்கு செல்வது நமக்கு நன்மையை கொடுக்கும். அதிலும் நமது தமிழ் நாட்டில் உள்ள புராதனக் கோவில்களில் பஞ்சாங்க படனம் நடக்கும். அதாவது பஞ்சாங்கத்தில் உள்ள அணைத்து கணிப்புகளும் படிக்கப்படும். இந்த பஞ்சாங்க படனத்தில் கிரஹபலம், நக்ஷத்ரபலம் அனைத்தையும் வைத்து நமது நாட்டில் மழை, விவசாயம், லாப-நஷ்டம் அனைத்தையும் கணிப்பின்படி வாசிப்பார்கள். இதில் நாம் கலந்துக்கொண்டால், அந்த வருடம் என்னவெல்லாம் நடக்கும் என கணிக்கப்பட்டதை கேட்டு அதற்கேற்ப அனுசரித்து நடந்துக்கொள்ள உதவும். பஞ்சாங்க ஸ்ரவணம், அதாவது பஞ்சாங்கம் படிப்பதை கேட்பதாகும். பஞ்சாங்க ஸ்ரவணம் நமக்கு மட்டுமல்லாது நம்மைச் சார்ந்தவர்களுக்கும் மங்களகரமான நிகழ்வாகும்.

இந்த சர்வாரி புத்தாண்டு இனிய வருடமாக அமைய மூலாதார மூர்த்தியான விநாயகனை வருடத்தின் துவக்கத்திலிருந்து கடைசி வரை வினைதீர்த்து காத்தருளவேண்டும் என்று ப்ரார்தனைச் செய்து இந்த புத்தாண்டை மங்களகரமாக துவங்குவோம்.